கணணித்தமிழ்

சனி, 22 டிசம்பர், 2012



வலைப்பதிவு செய்ய எளிய வழி!


jot
தலைப்பை பார்த்ததுமே ஆம் வலைப்பதிவு செய்வது எளிதானது தானே,இதில் புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது என அலட்சியம் காட்ட வேண்டாம்.இது வழக்கமான வலைப்பதிவு சேவைகளை காட்டிலும் எளிதான சேவை பற்றிய பதிவு இது.

பிலாகர் அல்லது வேர்டுபிரஸ் மூலமாக சொந்த வலைப்பதிவை துவக்குவது எளிதானது தான்.சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்ள தேவையான எந்த தொழில்நுட்ப பரிட்சயமும் இல்லாமல் நமக்கான இணைய இடத்தை உருவாக்கி கொள்ள வலைப்பதிவுகள் வழிகாட்டினாலும் சிலருக்கு வலைப்பதிவுகளின் எளிமையே கூட புரிபடாத மாபெரும் தொழில்நுட்ப குழப்பமாக தோன்றலாம்.
அதிலும் குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் பரிட்சயம் அதிகம் இல்லாதவர்களுக்கு வலைப்பதிவுகளை துவக்கி பராமரிப்பதே கூட மிரட்சியாக‌ இருக்கலாம்.
இப்படி நினைப்பவர்கள் வலைப்பதிவு பக்கமே வரத்தயங்கலாம்.ஆனால் பலரும் வலைப்பதிவு செய்வதை பார்த்து அவர்களுக்கு நாமும் கூட வலைப்பதிவு மூலம் தங்கள் கருத்துக்களை இணையத்தில் வெளியிட விரும்பினால் வலைப்பதிவின் அடிப்படைகளை கஷ்டப்பட்டேனும் கற்றுக்கொண்டாக வேண்டும்.
ஆனால் வலைப்பதிவும் செய்ய வேண்டும் அதே நேரத்தில் வலைப்பதிவு தொடர்பான எந்த அடிப்படை அமசங்களும் தெரிந்திருக்க வேண்டிய தேவை இருக்ககூடாது என நினைத்தால் ஜாட்பிரஸ் வலைப்பதிவு சேவை அதனை அழகாக சாத்தியமாக்குகிறது.
பொதுவாக வலைப்பதிவு செய்ய வேண்டும் என்றால் புதிய வலைப்பதிவு பக்கத்தை அமைத்துக்கொண்டு அதில் புதிய பதிவுகளை வெளியிட்டு வர வேண்டும்.ஆனால் ஜாட்பிரஸ் சேவையில் வலைப்பதிவு கணக்கை துவக்காமலேயே வலைப்பதிவு செய்யலாம்.
அதிலும் எப்படி தெரியுமா எல்லோருக்கும் பரிட்சயமான இமெயில் மூலமே வலைப்பதிவு செய்யலாம்.ஆம் இந்த சேவையில் வலைப்பதிவு செய்ய இமெயில் அனுப்பினால் போதுமானது.எந்த கருத்தை பகிர்ந்து கொள்ள விருப்பமோ அதனை இமெயிலில் அடித்து இந்த தளத்தின் முகவரிக்கு அனுப்பிவைதால் போதும் அது அழகான பதிவாக வெளியாகிவிடும்.
அடுத்த பதிவை வெளியிட விரும்பினால் மீண்டும் இமெயில் வாயிலாகவே அனுப்பி வைக்கலாம்.அவ்வளவு தான்!. வலைப்பதிவு கணக்கை அமைப்பதோ தொடர்ந்து அதனை பராமரிப்பதோ தேவையில்லாமல் ஆனால் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டுக்கொண்டிருக்கலாம்.
இந்த பதிவுகளை நமது அடையாளத்தை வெளிப்படுத்தி கொள்ளாமலும் செய்யலாம் அல்லது நமக்கென்று ஒரு அடையாளத்தையும் உருவாக்கிகொள்ளலாம்.வலைப்பதிவுக்கென்று தனி அடையாளம் தேவை என்றால் முதல் பதிவை இமெயிலில் சமர்பித்த‌ பிறகு அனுப்பி வைக்கப்படும் பதில் மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் வழியே அதனை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
எளிதான வலைப்பதிவு முறையை விரும்புகிறவர்கள் குறிப்பாக வயதானவர்களுக்கு இந்த ஜாட்பிரஸ் பதிவுகள் ஏற்றதாக இருக்கும்.
எளிமையான வலைப்பதிவு வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட ஜாட்பிரஸ் கூடுதல் அமசங்களை படிப்படியாக சேர்த்துக்கொண்டே வருகிறது.
பதிவுகளில் சக பதிவர்கள் கருத்து தெரிவிக்கும் வசதி இருப்பதோடு பதிவர்கள் டிவிட்டரில் இருப்பது போல பரஸ்பரம் ஒருவரை ஒருவரை பின்தொடரும் வசதியும் இருக்கிறது.ஆனால் பின் தொடரும் வசதி தேவை என்றால் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.உறுப்பினாராக இருந்தால் இமெயில் மூலம் அல்லாமல் நேரடியாகவே பதிவுகளை வெளியிடவும் திருத்தங்களை மேற்கொள்ளவும் செய்யலாம்.
வலைப்பதிவு செய்வது இதைவிட எளிதாக முடியாது.அது தான் ஜாட்பிரஸ்.
இணையதள முகவரி;http://www.jotpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக